×

எடப்பாடியே அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார்- செங்கோட்டையன் 

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இதில் அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்சிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை. பெண்களுக்காகவே பல்லடத்தில் மாநாடு நடத்தினார்கள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் ரூபாய் பணம், பேருந்து வசதி, உணவு, சேலை அனைத்தும் வழங்கி தான் அந்த கூட்டத்தை கூட்ட முடிந்தது. தவெக சார்பில்  ஈரோடு விஜயமங்கலத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு லட்சம் பேர் வந்தார்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூட்டத்தை கூட்டியிருந்தோம். பணமில்லாமல் வருகின்ற கூட்டம் இங்கே, பணம் கொடுத்தால் வருகின்ற கூட்டம் அங்கே, அதுவும் அவர்களுக்கு இரண்டு மணி நேரம்தான் டைம் அதற்கு மேலே சென்றால் அவர்கள் எழுந்து சென்று விடுவார்கள் ஆனால் இங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டம் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வருகிறார்கள். விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என உயிரை பணயம் வைத்துக் கொண்டு இயக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார் தவெக.விற்கு வருகிறார்கள் என்பதை கூற இயலாது. வெளிப்படையாக கூறினால் அங்கே பிடித்து வைத்துக்கொள்வார்கள். பொங்கலுக்குள் அவர்களை தவெக.வில் இணைப்பதற்கான  பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தெளிவாக இருக்கின்றனர். எடப்பாடியார் மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுக.விற்கு செல்ல மாட்டார். ஆனால் அழைக்க வாய்ப்பில்லை, இதனை மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி. டிடிவி, ஓபிஎஸ் தவெக கூட்டணியில் இணைவது விரைவில் நடைபெறும்” என்றார்.