“விஜய் அங்கிளுக்கு வாக்களித்தால் தான் சாப்பிடுவேன் என்று குழந்தைகள் சொல்லிவிட்டால் தவெக வெற்றி பெறும்”- செங்கோட்டையன்
23ம் தேதி வாக்கு பதிவு நாளின் போது, விஜய் அங்கிளுக்கு வாக்களித்தால் தான் சாப்பிடுவேன் என்று குழந்தைகள் அனைவரும் சொல்லி விட்டால் போதும் தவெக வெற்றி பெற்று விடும் என தமிழக வெற்றி கழக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபி நகராட்சிக்குட்பட்ட காமாட்சியம்மன் கோவில் வீதி, காந்தி நகர், வாய்க்கால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தொண்டர்களுடன் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று, காமாட்சியம்மன் கோவில் வீதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய கே.ஏ. செங்கோட்டையனுக்கு, பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது, “42 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்காக உழைத்த பிறகு, சாதாரண உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். அதற்குப் பிறகு அவர்கள் என்னை வேட்டி கூட கட்டக்கூடாது எனப் புகார் அளித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு என இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியில்தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்புமனு கூட செல்லாது எனப் புகார் அளித்தார்கள். நன்றாக நடந்து செல்பவனைப் பார்த்துக் 'கால் மொண்டி' என்று சொல்லும் அளவிற்கு, வேட்புமனு சரியில்லை என்று நான்கு மணி நேரம் போராடினார்கள். குழந்தைகளுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், 23ம் தேதி காலை 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, இறைவனை வணங்கிவிட்டு, தாய், தந்தை கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, 'விஜய் அங்கிளுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்தால்தான் நான் சாப்பிடுவேன்' என்று சொல்லிவிட்டால் போதும் முடிந்தது. தவெக வெற்றி பெற்று விடும்”என்றார்..