×

தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட கல்லூரி மாணவர்கள்! போலீசாரையே ஏமாற்றிய தவெகவினர்

 

சேலம் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு, தொண்டர்களுக்கும் அனுமதி சீட்டு விநியோகம் செய்யப்பட்டது. 


சேலம் சீலநாயக்கன்பட்டி, தாளமுத்து நடராஜன் தோட்டத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ள சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் யில் விஜய் கலந்து கொண்டு பேசினார் . இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 11 சட்டமன்ற தொகுதிகளின் த.வெ.க நிர்வாகிகள் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக த.வெ.க தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதோடு கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நிர்வாகிகள் மட்டுமின்றி கட்சி உறுப்பினர்கள் பலருக்கும் நிர்வாகிகள் கூட்டத்திற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக த.வெ.க. உறுப்பினர்களாக உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பலர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான அனுமதிச்சீட்டுடன், கூட்டத் திடலுக்கு வந்திருந்தனர். போலீசாரும் வேறு வழி இன்றி அனுமதி சீட்டு வைத்திருந்த அனைவரையும், நிர்வாகிகளா? என ஆராயாமல் கூட்டத்திடலுக்குள் அனுமதித்தனர். அதன் மூலம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு, நிர்வாகிகள் அல்லாத கட்சி உறுப்பினர்களுக்கும் அனுமதி சீட்டை வழங்கி விஜயின் கூட்டத்திற்கு ஆட்களை திரட்டியதால் குறிப்பிட்டதை விட அதிக அளவில் கூட்டம் திரண்டதை காண முடிந்தது. அதேபோல் போலீசார் விதித்த நிபந்தனையை பின்பற்றாமல் இரண்டு சக்கர வாகனங்களில் த.வெ.க.வினர் ஊர்வலமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது குறிப்பிடத்தக்கது.