×

“தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர்”- இபிஎஸ்க்கு தவெக பதிலடி

 

குதிரை பேரம் நடந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர் என தவெக பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார். தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவத்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார்.

தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை. தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய? மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், இந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர்.

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரியாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளது.