விழாவில் விட்டுப்போன அதிமுக MLA பெயர்! ஓடி சென்று மன்னிப்பு கேட்டு ‘இனி இப்படி நடக்காது’ என வருத்தம் தெரிவித்த அமைச்சர் ரமேஷ்
பழனியில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பொது தரிசன வரிசையில் மக்களோடு மக்களாகக் காத்திருந்து சாமி தரிசனம் செய்து அன்னதான வரிசையில் நின்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறையின் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கோவிலில் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது கொண்டு வர முடியும் என்பது குறித்து இந்த ஆய்வின் போது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதுடன், முடிவுற்ற சில புதிய திட்டங்களையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ரமேஷ் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், இன்று பல்வேறு இடங்களில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டு கால முந்தைய ஆட்சியில் பழனி கோவிலைப் பொறுத்தவரை பல்வேறு விஷயங்கள் வணிக ரீதியாகவும், வெறும் வியாபார நோக்கத்தோடும் மட்டுமே செய்யப்பட்டுள்ளது இன்றைய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அந்தத் தவறான நடைமுறைகள் அனைத்தையும் முற்றிலும் மாற்றி அமைத்து, உண்மையிலேயே பக்தர்களும் பொதுமக்களும் முழுமையாகப் பயன்பெறும் வகையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான மேல்மட்ட ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
விழாவில் விட்டுப்போன அதிமுக MLA பெயர் ஓடி சென்று மன்னிப்பு கேட்டு.. வருத்தம் தெரிவித்த அமைச்சர் ரமேஷ்..!❤️
— TVK விஜய்பாலாஜி (@Vijaybalaj5004) June 8, 2026
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl 💎🫂 pic.twitter.com/xU7pYhlOEv
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பழனி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழா பேனரில் முதல்வர் விஜய், அறநிலையத்துறை அமைச்சர் பெயர் மற்றும் விழாவுக்கு வராத மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் பெயர் இடம் பெற்றிருந்தன. ஆனால், பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பெயர் இடம் பெறவில்லை. இதனையறித்த அமைச்சர் ரமேஷ், எம்எல்ஏ ரவிமனோகரனிடம் சென்று, ”தவறாக நினைக்க வேண்டாம். இனி இது போல் நடக்காது. நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. நீங்கள் மக்கள் பிரதிநிதி”, என்று கையைப் பிடித்து வருத்தம் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.