×

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பேன்”- விஜய் ஆதரவு  பெற்ற  எடப்பாடி சுயேச்சை வேட்பாளர் பேட்டி

 

எடப்பாடி பழனிசாமியை அவரது தொகுதியில்  தோற்கடிப்பேன் என விஜய் ஆதரவு  பெற்ற  எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

விஜயின் தொண்டர்கள்,  நிர்வாகிகள் இன்று காலை முதலே  டிவி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக சேலம் மத்திய மாவட்ட  தவெக செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அருண்குமார் , வேட்பு மனு பரிசீலனையின்  போது ,  திடீரென காணாமல் போனதால் அவரது மனு தள்ளுபடி ஆனது.  இதனால் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.  இந்தநிலையில்  சுயேச்சை வேட்பாளராக டி.வி. சின்னத்தில் போட்டியிடும்  பிரேம்குமார் , நேற்று விஜய் அவர்களை சந்தித்துள்ளார். இதனையடுத்து  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , எடப்பாடி சட்டமன்ற தொகுதியில்  டிவி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பிரேம்குமாருக்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு தந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து இன்று காலை முதலே தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும்,  தொண்டர்களும் எடப்பாடியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரேம்குமார் கூறுகையில், “நான் ஏற்கனவே விஜய் அவர்களின் ரசிகராக உள்ளேன். மேலும் விஜய் ரசிகர் மன்றத்தில் கிளைச் செயலாளராகவும் இருந்துள்ளேன்.இந்த நிலையில் தான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்.எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி ஆனதால்,  இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன்.  அதன் அடிப்படையில் விஜய் அவர்கள் எடப்பாடி தொகுதிக்கு  எனக்கு ஆதரவளித்துள்ளார்.  நான் இதன் மூலம் எடப்பாடி அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நிச்சயம் தோற்கடிப்பேன்.இன்று காலை முதலே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  எனவே என்னுடைய டிவி சின்னத்தை எளிதாக மக்கள் மத்தியில் கொண்டுச்சென்றுவெற்றி பெறுவேன்” என்றார்.