×

“ஊருக்குள்ள வரக்கூடாது ராஸ்கல்”- தவெக வேட்பாளருக்கு தவெகவினரே எதிர்ப்பு

 

சேலத்தில் தவெக வேட்பாளருக்கு தவெகவினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக செல்வம் போட்டியிடவிருப்பதாக விஜய் அறிவித்தார். இதனையடுத்து இவர் ஒவ்வொரு பகுதியாக சென்று நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வுருகிறார். இந்நிலையில் வேட்பாளர் செல்வம் நிர்வாகிகளை சந்திக்க சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதிக்கு சென்றார்.

கொளத்தூருக்கு நிர்வாகிகளை சந்திக்க வந்த மேட்டூர் தவெக வேட்பாளர் செல்வத்தின் காரை 4 ரோடு பகுதியில் இருந்த தவெக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நிறுத்தி ஊருக்குள் நுழையவிடாமல் தவெகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனநாயகன் படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகவும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் செல்வம் மீது சொந்த கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உடனே வேட்பாளருடன் வந்திருந்த நிர்வாகிகள் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவரை சந்திக்க நிர்வாகிகள் சம்மதிக்காததால் வேட்பாளர் செல்வம் மற்றும் அவரது நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.