‘விசில்’ சின்னத்துக்கு வாக்களிக்கக்கோரி குக்கர் விநியோகித்த தவெகவினர்
திருச்செந்தூர் அருகே வீடு, வீடாக குக்கர் விநியோகம் செய்த தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தீவிரமாக வாக்காளர்களையும், கட்சி நிர்வாகிகளையும் வெகுமதிகள் கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை குறிவைத்து காய்நகர்த்திய ஜெ.கே.ஆர்.முருகன் அங்கு நடந்த கோஷ்டி பூசல் காரணமாக தனது பார்வையை திருச்செந்தூர் தொகுதி திருப்பினார். தற்போது திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக இவர் மட்டுமே அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தியதாகவும், இதன் காரணமாக பணத்தை வாரி இறைத்துள்ளார். மேலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என கனவில் இருந்த பலர் விரக்தியடைந்துள்ளனர்.
இதனையடுத்து பில்டிங் கான்டிரக்டர், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் என பல தொழில்கள் செய்து வரும் தொழிலபதிரான இவர் தன்னிடம் பணிபுரியும் நபர்களை கொண்டே திருச்செந்தூர் தொகுதி முழுவதும் சின்னம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டிய குக்கர், விசில், கடலைமிட்டாய், அவரது பெயர், கட்சி பார்டர் கொண்ட டவல்களை தொண்டர்களிடம், பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கி வருகின்றனர். ஆனால் தேர்தல் பார்வையாளர்கள் கண்ணில் மண்ணில் தூவி வெகுமதிகளை தீவிரமாக வழங்கி வருகின்றனர். தற்போது உடன்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் குக்கர் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்து நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த குக்கர் வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் தவெக கட்சியினர் மீது தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.