தோல்வி பயம்... சர்வே எடுக்க சென்ற தவெகவினர் மீது சேகர்பாபு தூண்டுதலின் பேரில் திமுகவினர் தாக்குதல்- நிர்மல்குமார்
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பூக்கடை பகுதியில் தேர்தல் சர்வே எடுக்கச் சென்ற தவெகவினரை திமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனுமதியின்றி சர்வே எடுக்க கூடாது என போலீஸ் முன்னிலையிலேயே தவெகவினரை அடித்து விரட்டியதாக தவெகவினர் புகார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி நிர்மல்குமார், “துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் தவெக நிர்வாகிகள் தேர்தல் பணிக்காக சென்றபோது அமைச்சர் சேகர்பாபு திட்டமிட்டு ரவுடிகளை ஏவி எங்கள் நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். ஆறு பேருக்கு மேல் இதில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இரண்டு பேர் ஐசியூவில் உள்ளனர். சேகர்பாபு எங்களது நிர்வாகிகளுக்கு எல்லா வழிகளிலும் தொந்தரவு கொடுத்து வருகிறார். திட்டமிட்டு 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை தயார் செய்து எங்களது நிர்வாகிகள் அவ்வழியாக செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்துள்ளார்கள். கர்ப்பிணிப் பெண்ணையும் தயவு இன்றி கடுமையாக தாக்கியுள்ளார்கள். தோல்வி பயத்தில் சேகர்பாபு எங்களது நிர்வாகிகளை தாக்கி வருகிறார். இந்த முறை சேகர்பாபு துறைமுகம் தொகுதியில் தோல்வியடைவது உறுதி. சேகர்பாபு தோற்கும் வரை எங்களது நிர்வாகிகள் தொய்வில்லாமல் வேலை செய்வார்கள்.
காசு வாங்கி வேலை செய்பவர்கள் எங்கள் நிர்வாகிகள் அல்ல, எங்கள் தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் வேலை செய்ய தயாராக உள்ளார்கள். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் 24 மணி நேரமும் வேலை செய்ய தயாராக உள்ளார்கள். திமுக ரவுடி அரசியலை கைவிட வேண்டும். ஒவ்வொரு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளையும் சேகர்பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசுகிறார். எங்கள் நிர்வாகி சீமான் என்ற ஒருவரை மூன்று நாட்களாக காணவில்லை. வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் சென்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. சேகர் பாபு போன்ற ரவுடிகள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். 2026 தேர்தலில் அனைத்து திமுக ரவுடிகளும் ஒழிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தை நாடி எங்கெங்கு வழக்கு பதிவு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம். தோல்வி பயம் ஒன்றே காரணம். சேகர்பாபு பார்த்த அரசியல் வேறு, நாங்கள் மக்களுக்காக செய்யும் அரசியல் வேறு, இதை சேகர்பாபு புரிந்து கொள்ள வேண்டும். திமுகவிற்கு எதைப் பார்த்தாலும் விசிலை பார்ப்பது போலவும் தமிழக வெற்றிக்கழக கொடி போலவும் தெரிகிறது, எதை பார்த்தாலும் தடை செய்கிறார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல விசிலை பிடுங்கி வைக்கிறார்கள். சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த திமுகவினர் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்கள், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.” என்றார்.