"நம்ம மக்களுக்காக நம்மளே இறங்கி சுத்தம் பண்றதுல தப்பே இல்ல"- வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக எம்எல்ஏ
மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெக எம். எல். ஏ ஜெகநாத் மிஸ்ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தேனி மாவட்டம் கம்பம் அருகே குப்பைகள் மற்றும் மதுபாட்டில்களால் கடுமையாக மாசடைந்து துர்நாற்றம் வீசிய சின்ன வாய்க்காலை தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா சுத்தம் செய்தார். பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் தண்ணீர் செல்ல முடியாத சூழலில் இருந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபடடார். நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தவெகவினர் உடன் இணைந்து, வாய்க்காலை சுத்தம் செய்த கம்பம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இச்சம்பவம் குறித்து ஜெகநாத் மிஸ்ரா பேசுகையில், "குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டுவந்த வாய்க்கால் இன்று இப்படி ஒரு நிலையில் உள்ளது. சுடுகாட்டிற்கு இந்த வாய்க்கால் வழியே தான் செல்கிறார்கள். ஆகவே இறந்தவர்கள் பயன்படுத்திய மெத்தை, துணி, மாலைகள் உள்ளிட்டவற்றை இந்த வாய்க்காலில் தூக்கிவிசிவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என ஏராளமான குப்பைகளால் தண்ணீர் வாய்க்காலில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லாத நிலையில் உள்ளது. தன்னார்வலர்கள் பலரும் இதுகுறித்து வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு வந்தனர். இன்று தூய்மைபணியாளர்கள் மற்றும் தவெகவினருடன் சேர்ந்து தூய்மை செய்தோம், மக்களுக்காக நல்லது செய்வதில் தவறு இல்லை. அந்த பொறுப்பை நான் ஏற்று கொண்டு தூய்மை செய்தேன்" என்றார்.