×

“எங்க அம்மா உணவகத்தில் பல ஆண்டுகளாக தோசை விற்பனை! எம்.எல்.ஏ மேல தப்பு இல்ல”- ஊழியர் பேட்டி

 

அம்மா உணவகத்தில் கம்பம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தோசை சாப்பிட்டது சர்ச்சையான நிலையில், பல ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தில் தோசை விற்பனை செய்யப்படுவதாக ஊழியர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.


 கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா,  அண்மையில் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு தோசை சாப்பிட்ட வீடியோ வைரலானது.
வெளியில் இருந்து தோசை வாங்கி வந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ரீல்ஸ் எடுத்துள்ளார்.  அம்மா உணவகத்தில் தோசை கிடையாது,  த.வெ.க எம்எல்ஏவுக்கு மட்டும் எங்கிருந்து தோசை வந்தது? ரீல்ஸ் ஆட்சியில் இருந்து எப்போதுதான் தவெக அரசு விழிக்கும்? என நெட்டிசன்கள் அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.


இந்நிலையில் அம்மா உணவகத்தில் கம்பம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தோசை சாப்பிட்டது சர்ச்சையான நிலையில், பல ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தில் தோசை விற்பனை செய்யப்படுவதாக ஊழியர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக அம்மா உணவக ஊழியர் அளித்துள்ள பேட்டியில், “கொரோனா காலத்தில் இருந்தே இங்கு தோசை விற்பனை செய்கிறோம். நேற்று எம்.எல்.ஏ வரும்போது அவருக்கென எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. நாங்கள் செய்துகொண்டிருந்த தோசையில் ஒரு தோசையை கொடுத்தோம். அவர் சாப்பிட்டுவிட்டு சென்றார். கொரோனா காலத்தில் இருந்தே இட்லி, பொங்கல், தோசை விற்கிறோம். அதற்கு முன்பு இட்லி மட்டுமே விற்பனை செய்தோம். மக்கள் அதிகமாக தோசை கேட்டதால் தோசை விற்பனை செய்கிறோம்” என்றார்.