அடுத்த ஓரிரு வாரங்களில் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை வெளியீடு- நிர்மல்குமார்
அடுத்த ஓரிரு வாரங்களில் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை வெளியிடப்படுமென அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (08.10.2026) நடைபெற்ற Windergy India 2026-ன் 8-வது சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டை, ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காற்றாலை மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி குறித்து தொழில்துறை தலைவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிர்மல்குமார், “ஓரிரு வாரங்களில் தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும். முதலீட்டாளர்கள் தமிழகத்தில் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் புதிய எரிசக்திக் கொள்கை அமையும். சூரிய மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் உபரி மின்சாரத்தை முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.3 ஆண்டுகளில் 7 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியை மறுமேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதபடி நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளது” என்றார்.