போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவை சேர்ந்த 56 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்காக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததின் எதிரொலியாக கைதை கண்டித்து சங்ககிரியில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட தவெக தொண்டர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த 27- ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டிற்காக சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தவெக நிர்வாகி சஞ்சீவ் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டிற்காக சேலம் முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து மாநாடு முடிந்தும் சில பேனர்கள் அகற்றப்படவில்லை என கிச்சிப்பாளையம் காவல்துறையினர் தவெக பகுதி தலைவர் சஞ்சீவை விசாரணை என்ற பெயரில் அழைத்து ஆபாச வார்த்தைகளால் பேசியும் அடித்தாகவும் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைக்கண்டித்து சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே தவெக சங்ககிரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சார்பில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆதிநாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகாவினரை சங்ககிரி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.