×

37 நாட்களுக்கு பிறகு அரசியல் கூட்டத்தில் பேசுகிறார் விஜய்!

 

தவெக தலைவர் விஜய் 37 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் அரசியல் கூட்டத்தில் பேசுகிறார். கடைசியாக ஈரோட்டில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்  அடுத்த பூஞ்சேரி 4 பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநில மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இன்று காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி பொறுப்பாளர்கள் என 1200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுபவர் எனவும் தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தவெக தலைவர் விஜய்யை வரவேற்று நட்சத்திர விடுதியின் நுழைவு வாயில் அருகே பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பணியில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் தவிர வேறு எங்கும் பொதுவெளியில் விஜய் பேசவில்லை.