×

தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் நேரில் மனு..! கைதாவாரா பொன்ராஜ்?

 

திமுக ஆதரவாளரான பொன்ராஜ், தவெக பெண் தொண்டர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார். இதற்காக அவரை தவெக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்ராஜ் மீது, தவெக தலைவர் விஜய் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.

யார் இந்த பொன்ராஜ்...?

 மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜின் பேச்சு தற்போது சர்ச்சைக்குள்ளாக்கி உள்ளது. இவர் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்ற தனிக்கட்சியை 2016இல் தொடங்கினார்.தொடர்ந்து அரசியல் களங்களில் இவர் தொடர்ந்து இயங்கினார். ஒரு கட்டத்தில் ரஜினியுடன் இயங்கினார், அவர் அரசியலுக்கு வராததை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் பக்கம் சாய்ந்தார். 2021 தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் மநீம வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார். தொடர்ந்து இவர் அரசியல் விமர்சகராக, அரசியல் பார்வையாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இருப்பினும் திமுக சார்பாளராகவும் பார்க்கப்படுகிறார்.

இந்தச் சூழலில் இவர் தொடர்ந்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் தவெக குறித்து பேசுகையில், பொன்ராஜ் தெரிவித்த சர்ச்சை கருத்து தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம்; புருஷன் எனக்கு தேவையில்லை, எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம்" என கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார்.

இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது X தளத்தில், "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில், விஜய் வழக்கம்போல் இதை X தளத்தில் கண்டனம் தெரிவிப்பதை போல் கடந்துவிடுவார் என பார்க்கப்பட்ட நிலையில், இன்றிரவு திடீரென சென்னை எழும்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அதிரடியாக நேரில் வருகை தந்தார், விஜய். அங்கு பொன்ராஜின் மீது தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் கொடுத்த அந்த புகாரில், "ஆளும் திமுகவின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான திமுக தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.