×

வேலூரை நெருங்கிய தவெக தலைவர் விஜய்..!

 

வேலூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான விஜய் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதற்காக, இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டார்.

சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ள விஜய்யின் வாகனத்தை பின்தொடர காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியை கடந்தார் விஜய். அப்போது அவருடைய வாகனத்தை பார்த்த தொண்டர்கள் ‘தவெக தவெக’ என முழக்கமிட்டு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனால் சுங்கச்சாவடி பகுதி முழுவதும் தவெக கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்தால் பரபரப்பாக காணப்பட்டது. விஜயின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

4,900 நிர்வாகிகளும் நிழல் தரும் கொட்டகைக்குள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கேலரியிலும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 50 தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வசதிக்காக 25 மருத்துவர்கள் கொண்ட குழு, 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக சுமார் 900 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் நிர்வாகம் எழுப்பிய 20 கேள்விகளுக்கு தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதால், நிகழ்ச்சிக்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அகரம்சேரியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், தவெக நிர்வாகிகள் சர்வீஸ் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி மைதானம் அருகிலிருந்த இரண்டு பாழடைந்த கிணறுகள் பாதுகாப்புக்காக மூடப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. விஜய்யை காண சாலை முழுவதுமே ரசிகர்கள் திரண்டுள்ளதால் அந்த பகுதி முழுக்க பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.