பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
கோவையில் பெண்ணிடம் தகராறு செய்த தவெக வேடப்பட்டி நகரச் செயலாளர் பிரகாஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தில் வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் திரு. பிரகாஷ் அவர்கள், 15.11.2026 அன்று ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பாக, கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாகக் கருதப்படுவதால், கழகத்தின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைப் பேணும் நோக்கில், அவர் வகித்து வரும் அனைத்து கழகப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். எனவே, 15.11.2026 முதல் இந்நீக்கம் நடைமுறைக்கு வருகிறது. கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை தவெக நிர்வாகி பிரகாஷ் எடுத்துச் செல்ல முயன்ற காணொலி இணையத்தில் வைரலானது. கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.