×

நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி

 

நெல்லையில் நெசவாளர்கள் காய வைத்த நூல் மீது காரை ஏற்றியதாக தவெக ஒன்றிய செயலாளரால் புகார் எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக தலைமுறை தலைமுறையாக கைகளினால் சேலைகள் போன்றவற்றை நெசவு செய்து வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சேரன்மகாதேவி ஒன்றிய த.வெ.க. நிர்வாகி சிவா என்பவர் இந்த நெசவாளர் குடியிருக்கும் இதே பகுதியில் கடந்த ஒர் ஆண்டுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அசோக்குமார் என்ற நெசவாளர் தனது நெசவுத் தறியில் வேலையை தொடங்குவதற்காக பாவு என்ற முறையில் நூலை வெயிலில் காய வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த தவெக நிர்வாகி சிவா, பாவு வைத்திருந்த நூலின் மேல் காரை ஏற்றி நெய்து வைத்திருந்த பாவினை சீர்குலைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து அசோக் குமார் அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.