×

ரூ.20 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி கைது

 

ரூ. 20 லட்சம் மோசடி செய்த தவெக தென்காசி தெற்கு மாவட்ட இணை செயலாளர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் பண மோசடியில் தொடர்புள்ளதாகவும், எனவே அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு வீடியோ கால் வந்துள்ளது. அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் இருவர் தோன்றி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதை உறுதி செய்துள்ளதாகவும், அதில் இருந்து தப்பிக்க ரூ. 20 லட்சத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு செலுத்துமாறும் அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாள்களுக்குள் திருப்பித் தந்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர். பின்னர் அஷ்ரப் வீடியோ காலில் வந்த போலி போலீஸார் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு  ரூ. 20 லட்சத்தை செலுத்தியுள்ளார். எனினும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பணம் திருப்பித் தராததால்,  தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அஷ்ரப் திருவனந்தபுரம் சைபர் கிரைமை போலீஸில் புகார் அளித்தார். 

போலீஸார் விசாரணையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டியைச் சேரந்த பேச்சிகுமார்(27) என்பவருடைய வங்கிக் கணக்கிற்குச்  செலுத்தப்பட்டிருந்த்து தெரியவந்தது. பேச்சிகுமாரைப் பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில் கடையம் பெரும்பத்தைச் சேர்ந்த கிரிப்சன் உத்தரவின் பேரில் பேச்சிகுமார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. கிரிப்சன், தென்காசி தெற்கு மாவட்ட தவெக துணைச் செயலாளராக உள்ளார். பேச்சிகுமாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தியதற்கு அவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக கொடுத்துள்ளதும் கிரிப்சன்  வங்கிக்கணக்கு மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி பரிவர்த்தை நடைபெற்றுள்ளதும் கேரள சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிரிப்சன், பேச்சிகுமார் இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்குத் தொடர்புள்ளதால் அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.