×

“ஸ்டாலின் சார் துருப்பிடித்த இரும்புக்கரத்தை காயலான் கடையில் போடுங்கள்”- அருண்ராஜ்

 

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தனது டீக்கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் செந்தில் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தலை துண்டிக்கும் கொடூரம்… துருப்பிடித்த இரும்புக்கரத்தை காயலான் கடையில் போடுங்கள் திரு.மு.க.ஸ்டாலின் சார். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தனது டீக்கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் செந்தில் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருளில் மூழ்கி கிடக்கிறது. ஆனால், காவல்துறையின் அமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் கலர் கலராக ரீல் சுத்தி கொண்டிருக்கிறார். 

மது அருந்துவதை தட்டிக் கேட்டால் கொலை, கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்தால் கொலை என போதை கும்பலின் மிதமிஞ்சிய அட்டூழியமும், அராஜகமும் புரையோடிப் போய்விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், போதை மாஃபியாக்களும் சுதந்திரம் பறவைகளாக, அச்சம் இல்லாமல் குற்றம் செய்யத் துணிகிறார்கள். திமுக ஆட்சிக்கு எதிராக யாராவது சோஷியல் மீடியாவில் கருத்து சொன்னால் மட்டும் தான் காவல்துறைக்கு புத்துணர்ச்சி வந்து விடும் போல.! மற்ற நேரமெல்லாம் கண்ணை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகிறது. தினம் தினம் கொலை சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் கையில் வைத்திருப்பதாக கூறிக் கொள்ளும் அந்த துருப்பிடித்த இரும்புக் கரத்தை இனிமேல் கீழே தூக்கிப் போடுவதே நல்லது.!  தமிழ்நாட்டு மக்கள் சற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.