"ஆபரேஷன் சக்சஸ்... அதிமுக பேஷண்ட் டெட்.." - அருண்ராஜ் கலகலப்பு பேச்சு
ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து தமிழகத்திற்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
திருப்பூரில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “சட்டமன்றத்தில் நான் எப்போதும் நம் மூத்த அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அந்தப் பக்கம் வரும்போது, அண்ணன் அவர்களைப் பார்த்து நகைச்சுவையாக ராகிங் செய்வது வழக்கம். நான் அண்ணனைப் பற்றி அடிக்கடி சொல்வதுண்டு. மருத்துவத்தில் நான் எப்படி ஒரு டாக்டரோ, அதேபோல அரசியலில் நமது அண்ணன் ஒரு அரசியல் டாக்டர்! அரசியலில் என்ன பிரச்சினை, அதிமுகவில் என்ன பிரச்சினை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை அளித்து, இறுதியில் 'ஆபரேஷன் சக்சஸ்... அதிமுக பேஷண்ட் டெட்' என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு மாபெரும் அரசியல் புரட்சி! கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தனித்து நின்று 35% வாக்குகளைப் பெற்று வென்றுள்ளோம். பணபலம், அதிகாரப் பின்னணி இருந்தால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை மாற்றி, சாமானியனும் சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். 1947ல் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை கிடைத்ததுபோல, இந்தத் தேர்தல் மூலம் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து தமிழகத்திற்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளது” என்றார்.