"இது ஜனநாயக சோஃபா"- உதயஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்பி. கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சோஃபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இந்த சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் தலைவர் தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அருணராஜ், “தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் "சனாதான” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு.உதயநிதி அவர்களே, அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்” எனக் கூறியுள்ளார்.