×

“CBI மூலம் தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது”- அருண்ராஜ் பரபரப்பு பேட்டி

 

தவெகவிற்கு  பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் தவெக ஆதரவாளர்  திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவுகள் பெருகி வருவது மகிழ்ச்சியை தருகிறது, தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை முடிவாகும், தமிழக வெற்றி கழகத்துடன் கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது கூறப்படவில்லை, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை எந்த ஒரு கட்சியும் சொல்லவில்லை, சமூக நீதியை கொண்ட தமிழக வெற்றி கழகம் தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதை கூறியுள்ளது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகள், ஆலோசனைகளை தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார், தமிழகத்தில் திமுகவின் மோசமான ஆட்சி நடைபெறுகிறது சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கே தெரியும், எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று உள்ளது, திமுகவில் ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது அவர்களின் முடிவு, தோற்கக்கூடிய திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது, திமுக அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேர்வது இயல்பு ஆனால் தமிழகத்தில் 90 சதவீத மக்கள் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி வர வேண்டும் என விரும்புகிறார்கள், அரசியலில் வரக்கூடிய இளைஞர்களுக்கு நம்பிக்கையாக விஜய் இருக்கிறார். கூட்டணி பேச்சுவார்த்தை 22 ஆம் தேதி என திமுக கூறிய நிலையில் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளது திமுகவின் பயத்தை காட்டுகிறது, தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் செல்வாக்கு, ஆதரவால் திமுக முன்னதாகவே தேமுக கூட்டணிக்காக கை, காலில் விழுந்து உறுதி செய்துள்ளது, ஆளுங்க வச்சி கூட்டத்திற்கு ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படுகிறது, தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான கண்டிஷன்கள் போடப்படுகிறது, சேலத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு விரும்பத்தகாத ஒன்று இனிவரும் காலங்களில் இது போன்றவை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவாக கூறிவிட்டார், இப்படி இருக்கையில் தவெக பாஜகவுடன் மறைமுக கூட்டணி எனும் வாதத்தை எப்படி ஏற்க முடியும், ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்தார்கள். இப்போது தான் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். விஜய் விரைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை விஜயின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.