×

அதிமுக- தவெக இணைய வேண்டும் என்பதுதான் விஜய்யின் விருப்பம்: ஆதவ் அர்ஜூனா

 

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சென்னை பனையூர் அலுவலகத்தில்  நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “திமுக அரசில் ரேசன் அரிசியை இலவசம் என்று சொன்னார்கள். ஆனால் அதை யாரும் சாப்பிட முடிவதில்லை. ரேசன் அரிசியை வாங்கி, இட்லி செய்வதற்கும், மாட்டுக்கும்தான் கொடுப்பார்கள். எப்படியாவது மக்கள் சாப்பிடும் வகையிலான அரிசியை மட்டும் கொண்டுவந்து விடுங்கள் என எங்கள் தலைவர் சொன்னார். அதிமுக மற்றும் தவெக இணையும்போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகும். முதலமைச்சர் விஜய்யின் விருப்பமும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதுதான். 

அதிமுக வேறு திசையில் செல்லும் போது முதலில் குரல் கொடுத்தவர் செங்கோட்டையன். இபிஎஸ் உறவினர் இன்று தவெகவில் இணைய வந்துள்ளார். 90% தொண்டர்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். த.வெ.கவில் இணையும் மாற்றுக் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மூலமாக மாதம் 1500 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது. ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம் தான் கொளத்தூர் தோல்வி. எங்கள் முதலமைச்சர் கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும்” என்றார்.