“விஜயை யார் விமர்சித்தாரோ அவர் அரசிலில் காணாமல் போய்விடுவார்”- ஆதவ் அர்ஜூனா
தமிழக முதல்வர் விஜய் விளையாட்டை மிகவும் நேசிக்கக்கூடியவர். அதனால் தான் விளையாட்டு துறையை என்னிடம் ஒப்படைத்து, டிரக்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார் என்று புதுச்சேரியில் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் உப்பளம் உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஒரு விளையாட்டு வீரராக புதுச்சேரி முதல்வர் இருக்கின்றார். தமிழக முதல்வர் விஜய் விளையாட்டை மிகவும் நேசிக்கக்கூடியவர். அதனால் தான் விளையாட்டு துறையை என்னிடம் ஒப்படைத்து, டிரக்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். உங்களுக்கும்(முதல்வர் ரங்கசாமி), அவருக்கும்(தமிழக முதல்வர் விஜய்) ஒரு ஒற்றுமை இருக்கிறது. உங்களை யார் விமர்சித்தாலும் அமைதியாக இருப்பீர்கள். யார் விமர்சித்தாரோ அவர் அரசிலில் காணாமல் போய்விடுவார். அதேபோன்ற எங்களின் முதல்வர் யார் விமர்சித்தாலும் அவர் அமைதியாக இருப்பார். யார் விமர்சித்தார்களோ அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். உங்களுடைய பொறுமையும், நிதானமும் எங்களின் முதல்வரிடமும் இருக்கிறது. அதனை நான் உங்களிடம் கற்றுக்கொண்டிருக்கின்றேன். உங்களுடைய எளிமையும், மக்களை நீங்கள் அனுகக்கூடிய தன்மையையும் பார்க்கும்போது என்னுடைய வாழ்வில் கற்றுக்கொள்ள நினைக்கின்றேன். எப்போதும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என்பதை நான் பதிவு செய்கின்றேன். உங்கள் மீதான அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது. எங்களின் முதல்வருக்கும் இருக்கிறது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். விளையாட்டுக்கு இன்னும் நீங்கள் அதிகளவில் செய்ய வேண்டும்.
உப்பளம் உள்விளையாட்டு அரங்கில் ஏசி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். புதுச்சேரியில் நல்ல விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மீனவ சமுதாய மக்கள் நீச்சல், கூடைப்பந்து விளையாட்டுக்கு நிறைய பேர் வருகின்றனர். அவர்கள் மாநில அளவில் நன்றாக விளையாடுகின்றனர். கண்டிப்பாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள் சேர்ந்து விளையாட்டு போட்டிகளை உருவாக்கலாம். தென்மாநிலங்கள் சேர்ந்து ஒற்றுமையான விளையாட்டு போட்டிகளை நடத்தலாம். இன்றைக்கு இளைஞர்களிடம் போதைப்பொருள், மதுப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே நீங்களும், எங்களுடைய முதல்வரும் சேர்ந்து நல்ல விளையாட்டு போட்டிகளை எல்லா மாநிலத்திலும் நடத்த வேண்டும். விளையாட்டு மட்டும் தான் இளைஞர்களை ஒருங்கிணைக்க முடியும். கல்வியோடு சேர்ந்து, விளையாட்டையும் அதிகமாக கொடுக்கின்றோம். அதற்கு நீங்களே உதாரணமாக இருக்கிறீர்கள். கண்டிப்பாக புதுச்சேரி, தமிழக இளைஞர்கள் இணைந்து பல்வேறு போட்டிகளை நாம் நடத்துவோம்” என்றார்.