×

“ரமேஷ் சாதி என்ன என்பது எங்களுக்கு தெரியாது”- ஆதவ் அர்ஜூனா

 

சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, “இன்றைய தினம் வரலாற்றில் ஒரு பொன்னான நாள். இந்த நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி நாளாக வரலாற்றில் பதிவு செய்கிறோம். பெரியார்,அம்பேத்கர்,அண்ணா கனவு கண்ட சமூக நீதி மத சார்பற்ற ஒரு அமைச்சரவையை முதல்வர் உருவாக்கி உள்ளார். இந்த தேர்தலில் என்ன பெரிய வெற்றி என கேட்கின்றனர். இந்த தேர்தலில் பண பலம் தூக்கி எறிய பட்டுள்ளது, சாதியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். எல்லோருக்குமான ஒரு முதல்வராக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கி உள்ளனர். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என நாங்கள் சொன்னோம். ஆனால் அதை ஏளனமாக பார்த்தார்கள். தேர்தல் அரசியலில் முதல் மாநாட்டில் என்ன வாக்குறுதி அளித்து இருந்தாரோ அதனை முதல்வர் விஜய் நிறைவேற்றி உள்ளார்.

இளைஞர்களுக்கான ஒரு அமைச்சரவையை, இந்தியாவே பார்த்து பிரமிக்கும் வகையில் அமைச்சரவையை உருவாக்கி உள்ளார்,நிபந்தனையற்ற ஆதரவை கூட்டணி கட்சிகள் அனுமதித்து இருந்தாலும்,அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கேட்டதின் அடிபடையில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். உண்மையான சமூக நீதி நாளாக இன்று பார்க்கிறோம் , இன்றுதான் மன நிறைவோடு இருக்கிறேன் என முதல்வர் விஜய் ,திருமாவளவன் மற்றும் காதர் மொய்தீன் ஆகியோரை பார்த்து சொன்னார். ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமனம் செய்ததை விமர்சனம் செய்கின்றனர்,நாங்கள் வேட்பாளராக நிற்கும் நேரத்தில் யாருடைய சாதியை சொல்லியும் வாக்கு கேட்கவில்லை,ரமேஷ் சாதி என்ன என எங்களுக்கு தெரியாது.அது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தில் பேசுவதே இல்லை. யாரெல்லாம் கட்சிக்காக உழைத்தார்களோ அவர்களுக்கு வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி உள்ளார் ,ஒவ்வொரு முடிவும் இங்கு மதசார்பற்ற கொள்கை அளவில் எடுக்கப்படுகிறது” என்றார்.