×

“விஜய்யின் போராட்ட வடிவம் காணொளி வெளியிடுவதன் மூலமே இருக்கும்”- ராஜ்மோகன்

 

த.வெ க தலைவர் விஜய்யின் போராட்ட வடிவம் என்பது காணொளி வெளியிடுவதன் மூலமும் இருக்கும்... ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாதது ஏன் என்கிற கேள்விக்கு ராஜ் மோகன் பதில் அளித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திருச்சி மாவட்ட த.வெ.க சார்பில் மலைக்கோட்டை சறுக்குப்பாறை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க துணை பொதுச்செயலாளர் ராஜ் மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். த.வெ.க தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் மோகன், “எஸ்ஐஆர் தொடர்பாக த.வெ.க சார்பில் மலைக்கோட்டை மாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் செங்கோட்டைக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் கேட்க கூடிய அளவில் மிக எழுச்சியாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த.வெ.க நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்கள் அலைகழிக்கப்பட்டனர் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு இயக்கம் விரைவில் மீண்டும் தொடங்கும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு அது நடத்தப்படும்.

த.வெ க தலைவர் விஜய்யின் போராட்ட வடிவம் என்பது காணொளி வெளியிடுவதன் மூலமும் இருக்கும். நேற்று எஸ்ஐஆர் தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளிகள்தான் எஸ்ஐஆர் இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். வாக்குரிமை காக்கும் இந்த விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜயால் முடிந்த விஷயங்களை அவர் ஆலோசனைப்படி நாங்கள் செய்து வருகிறோம். எஸ் ஐ ஆர் என்பது வாக்குரிமையை பறிக்கக் கூடிய விவகாரமாக இருக்கிறது, இதில் ஒன்றிய அரசுக்கு மாநில அரசும் ஆதரவாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் காணொளி வெளியிட்டுள்ளார். விரைவில் அவர் வெளியே வந்து பேசுவார், நிச்சயமாக அது எழுச்சியான பேச்சாக இருக்கும். கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் 100% உள்ளது. இந்த விவகாரத்தில் அநீதிக்கு துணை போகக்கூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  எஸ்ஐஆர் படிவம் விநியோகம் செய்யும் பொழுது திமுகவை தவிர மாற்றுக் கட்சியினர் வந்தால் அவர்களுக்கு படிவங்களை கொடுக்காமல் அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். கட்சி வேறுபாடுகளை கடந்து வெளிப்படையாக என தேர்தல் நடத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாந்த் கிஷோரின் நிலை விஜய்க்கு ஏற்படும் என்கிறார்கள், ஆனால் 2026இல் யாருக்கு அந்த நிலை ஏற்படப்போகிறது என்பது தெரிய வரும்” என்றார்.