×

தமிழக சட்டமன்றத்தில் சலசலப்பு..! கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்..!

 

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு நடுவே, 6 மாதங்களுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூடியிருக்கிறது. நேற்றைய கூட்டத்தொடரில், கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பான விவாதத்தின்போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மூன்றாம் நாளான இன்று மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.ரத்த கொதிப்பு காரணமாக இப்படி வந்துள்ளீர்களா? என்று சபாநாயகர் கேட்டது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அமைச்சர் ரகுபதியும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ” கரூர் துயரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது; திமுக அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்துதான் கருப்புப்
பட்டை அணிந்தோம். கரூர் துயரத்தில் பங்கேற்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்தால் கிண்டல் செய்யும் தொனியில் சபாநாயகர் பேசியுள்ளார்” என கூறியிருந்தார்.

 இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று அவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தது பேசுபொருளாக மாறியது. நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தை முன்வைத்து இந்த பேட்ஜை அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிந்திருந்தனர்.