×

“டெல்லி சென்றது ஏன்? கூட்டணி குறித்து அழுத்தம் கொடுக்கிறார்களா?”- டிடிவி தினகரன் விளக்கம்

 

என்னுடைய தனிப்பட்ட விவகாரத்திற்காக டெல்லி சென்றேன். கூட்டணி குறித்து யாரும் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை உரியவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 109ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “டிடிவி தினகரன் அவரை சந்தித்தார், இவரை சந்தித்தார் என கூறியுள்ளீர்கள். பொதுக்குழு முடிந்த பிறகு கட்சி வேலைகள் உள்ளது, பொங்கல் நேரம் என்பதால் கழக நிகழ்ச்சிகள் இல்லை. சொந்த வேலைகளுக்கு பல ஊர்களுக்கு செல்கிறேன், டெல்லிக்கு சென்றால் அரசியல் வேலைகளுக்காக தான் செல்கிறேன் என இல்லை. எனக்கு எந்த அழுத்தமும் யாராலும் கிடையாது..உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் சேருகிறது என உரியவர்கள் அறிவிப்பார்கள். பொதுக்கூட்டத்தில் தெரிவித்த படி, 2026 தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என நான் நம்புகிறேன், நான் கூட்டணி அமைக்கும் கட்சி கண்டிப்பாக வெற்றிபெறும்.

அம்மாவினால் நான் அரசியலுக்கு வந்தவன், எந்த ஆட்சி தமிழ் நாட்டில் வரவேண்டும் என நாங்கள் நினைக்க விரும்புகிறோம். என் மனசுல எந்த பயமும் இல்லை, கனமும் இல்லை.. நான் தேர்தலில் எங்கே போட்டியிடுவேன் என முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்கு தலைமை ஏற்றால் நான் அறிவிப்பேன், நான் கூட்டணியில் தான் சேரப்போகிறேன், அவர்கள் அறிவிப்பார்கள். தமிழ்நாட்டில் உறுதியாக கூட்டணி ஆட்சி தான் அமையும். நான் என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது போல ஆர்வத்தில் ஒருவர் பேனர் வைத்துள்ளார், எனக்கும் அதற்கும் சம்மந்தம் கிடையாது. நான் கூட்டணிக்கு வார்த்தை கொடுத்துருக்கிறேன், நான் வார்த்தையில் நிற்பேன் என அவர்களுக்கு தெரியும், அவர்களுக்கு முன்பு நான் அறிவித்தால் நன்றாக இருக்காது. அமமுக பற்றி மட்டும் தான் நான் பேசமுடியும், ஓபி.எஸ், சசிகலா ஆகியவர்களின் நிலைப்பாடு குறித்து அவர்கள் தான் பேச வேண்டும். ஜனநாயகன் பட பிரச்சனை, விஜய் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.  அதன் படி தான் சிபிஐ விசாரிக்கிறது... அதை எப்படி அழுத்தம் என கூற முடியும்.  நீதியரசர் தான் படத்தை தடை விதித்துள்ளனர். அதை எப்படி அரசாங்கத்துடன் சேர்க்க முடியும்” என்றார்.