×

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே உண்மையான அஞ்சலி - டிடிவி தினகரன்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று. கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற இந்த படுபாதக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.