அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் 14 தமிழர்கள் பலி - டிடிவி தினகரன் இரங்கல்!
Oct 8, 2023, 12:23 IST
அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அத்திப்பள்ளி பட்டாசு விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனைக் கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.