×

திமுக அரசு தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்துள்ளது - டிடிவி தினகரன் 

 

ஈரோடு அருகே தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் அடித்துக் கொலை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பல், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு பல்லடம் அருகே மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி அடுத்தடுத்து திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

தமிழ்நாடு குற்றச்சம்பவங்களின்றி அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் முழங்கிய அடுத்த இரு தினங்களில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் கொலை தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.  தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பழிவாங்கல், ஆதாயக் கொலை, முன்விரோதம் என அடுக்கடுக்கான காரணங்களை கண்டறிந்து சமாளிக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு என்ன காரணம் சொல்ல காத்திருக்கிறார் ? 

எனவே, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.