×

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதே விபத்து, உயிரிழப்புக்கு காரணம்- டிடிவி தினகரன்

 

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது  மோதிய  விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்துக்கு ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன்.  

தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

எனவே,  மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு,  அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.