×

திமுகவினருக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது ஏன்?

 

உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் தி.மு.க அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.  நெல் கொள்முதல் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற வேண்டும்,  தனியாரிடம் இருக்கக்கூடாது,  குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் , கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க ஏதுவாக பங்கிட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன . அரசு கொள்முதல் தொடரும் என்றும் பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்கள் வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு செய்ய முடியாமல் இரண்டாவது ஆண்டாக விவசாயிகள் தவிப்பதற்கு தி.மு.க அரசே பொறுப்பேற்க வேண்டும்.உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் தி.மு.க அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன?நாளொரு வேஷம் போட்டு, வெற்று விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்தும் தி.மு.க.வினருக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது ஏன்? உடனடியாக முதலமைச்சர் திரு.ஸ்டாலின், விவசாயப் பயிர்க்காப்பீட்டு பிரச்னை குறித்து மத்திய அரசோடு பேசி, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.