"அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - தினகரன்
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.