×

இனி அதிமுக இன்னும் பலவீனம் அடையும்- டிடிவி தினகரன்

 

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அதிமுக பொதுக்குழுவின் தீர்ப்புக்கும், அமமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. அமமுக தொடர்ந்து பயணிக்கும். இன்றைய தீர்ப்பு தற்போதைய பழனிசாமிக்கு சாதகமாக இருந்தாலும், இது சட்டப் போராட்டம் எனவே இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளதாகவே நினைக்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இது தற்காலிக வெற்றியே. இரட்டை இலை சின்னம் பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமாகதான் இருக்கும். இரட்டை இலை இருந்தாலும் எடப்பாடியால் ஜொலிக்க முடியாது. ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் ஜெயித்து வருகின்றார். இறுதியில் யார் என்பது பார்ப்போம். வரும் காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்களால் அதிமுக வெற்றிப் பெற முடியும். 

பண பலத்தால் மட்டுமே அதிமுக கட்சி நடந்து வருகிறது. ஜெயலலிதா விசுவாசிகள் ஓரணியில் ஒன்று சேர்ந்தால் தான் திமுக-வை வெல்ல முடியும் ரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா? இரட்டை இலை எடப்பாடி பழனிசாமியிடம் சென்றால் அது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும். நடிகர் கமல் தகுதியான அரசியல்வாதி ஆகிவிட்டார். ஓபிஎஸ் எனது பழைய நண்பர். 3 முறை முதலமைச்சராக இருந்தவர். இப்போது ஒரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராகப் போராடிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டதால் அவர் என்னுடன் சேர வேண்டும் என்று கூறும் அளவுக்கான ஆள் நானில்லை” எனக் கூறினார்.