×

எந்த நீதிமன்றமும் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என சொல்லவில்லை- டிடிவி தினகரன்

 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஒரு டிடிவி, ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார். நானும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் நீண்டகால நண்பர்கள். இடையே சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்திருந்தோம். இன்று மீண்டும் இணைந்து விட்டோம். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஒய மாட்டோம்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி அப்போது பதவி விலகி இருந்திருந்தால், இன்று கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை இருந்திருக்கும். காவல்துறையின் மெத்தன போக்கால் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போதை கலாச்சாரத்தால் மாணவர்கள் சீழிவதை தடுக்க வேண்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அணைய போகிற தீபம் இப்படித் தான் எரியும். எனது வேண்டுகோளின் அடிப்படையில் தான் அன்று ஓ.பி.எஸ். ராஜினாமா செய்தார். அவரை நான் நம்பவில்லையோ என நினைத்து தான் தர்ம யுத்தத்தை துவக்கினார். 

இன்று தீயவர்கள் கையில் இயக்கம் உள்ளதால் என்னுடன் இணைந்துள்ளார். சுய நலத்துக்காக, சுய லாபத்துக்காக நாங்கள் இணையவில்லை. அம்மாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பது தான் எங்கள் நிலைப்பாடு. எந்த நீதிமன்றமும் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என சொல்லவில்லை. நாங்கள் இருவரும் கட்சியை மீட்ட பின்னர் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்" என தெரிவித்தார்.