×

சி.எம்.டி.ஏ (CMDA) புதிய உறுப்பினராக தவெக எம்.எல்.ஏ ரேவந்த் சரண் நியமனம்..!

 

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரவாயல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) புதிய உறுப்பினராகத் தன்னை நியமித்ததற்காக, முதலமைச்சர் விஜய்க்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், "என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த முக்கியப் பொறுப்பை வழங்கிய முதலமைச்சரின் நம்பிக்கையைக் காக்கும் வகையில், முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றுவேன்" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சென்னை பெருநகரப் பகுதிக்கான திட்டமிடல், வளர்ச்சிப் பணிகள், கட்டிட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ் வழங்குதல் இதன் முதன்மையான பணியாகும். தலைமையகம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.