இன்று நாகூர், வேளாங்கண்ணிக்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையும் அதிகபட்ச வாக்குப்பதிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.
இதனால், ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக போட்டியிடுகிறது. 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
இதில், பெரும்பாலான கணிப்புகள் திமுக தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால், ஆக்ஸில் மை இந்தியா மட்டும் தவெக ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது. மேலும், சிஎன்என், டைம்ஸ் நவ் போன்றவை அதிமுக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. எப்போது, இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் வெளியானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில், விஜய் ஆன்மீக பயணம் மேற்கொள்வது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதிகாலையிலேய தவெக தலைவர் விஜய் வேஷ்டி, சட்டை அணிந்து தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு நினைவு பரிசாக வேலும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் 29ஆம் தேதி ஷீரடிக்கு பயணம் மேற்கொண்டார் விஜய். சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற விஜய், ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 233 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், இன்று (மே 2) வேளாங்கண்ணி, நாகூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.