துணை முதல்வர் உதயநிதியை சீண்டிய தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகப்படுத்தப்பட்டார். 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய லோகேஷ் தமிழ்செல்வன், “என்னை வேட்பாளராக அறிவித்த விஜய் அண்ணனுக்கு நன்றி. அவர் முதல்வராக வேண்டும் என்பதே என் இலக்கு” என்றார்.அவர் தொடர்ந்து, “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா பிரச்சனை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராசிபுரத்தில் 24 மணி நேரமும் பார் செயல்படுகிறது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என குற்றம்சாட்டினார்.
மேலும், தனது தந்தை பி. தனபால் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தபோது ராசிபுரம் தொகுதிக்குச் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். "போதமலை சாலை, பாதாள சாக்கடை, பைபாஸ் சாலை என இந்தத் தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிரைவேற்றி தந்தவர் தன்தந்தை தான் என்றும் கூறினார்.
மேலும், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் (மாமன்னன்) நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் சபாநாயகரின் மகன் கதாபாத்திரம் தான் நான். திரையில் அவர் நடித்தார், ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு சபாநாயகரின் மகனாக, அந்த 'மாமன்னன் மகனாக' நான் உங்கள் முன் நிற்கிறேன். கொஞ்சம் பார்த்துப் பேசுங்க" என்று உதயநிதியை நேரடியாகச் சீண்டியது வகையில் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறுதியாக, “அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம். இந்த முறை தமிழ்நாட்டின் வண்ணமே மாறும்” என உறுதியளித்தார்.கூட்டத்தில் பெண்கள் நடனம் ஆடி வேட்பாளருக்கு உற்சாகம் அளித்தனர்.