×

திருப்பதியில் கொட்டித்தீர்க்கும் மழை; முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன?

 

தமிழ்நாட்டை கடந்த ஒரு வாரமாக உலுக்கியது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி. வேறோரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர மாநிலத்தைச் சிதைத்தது. சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. விடாது  பெய்த கனமழையால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.

குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதியிலும் கனமழை வெளுத்து வாங்கியது.  30 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருப்பதி மலைப் பாதைகள் கடுமையான சேதமாகின. திருப்பதி மலைக்கு நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் வழித்தடங்களும் பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதியிலுள்ள சுவர்கள் இடிந்து விழுந்ததுடன்,  மலை அடிவாரத்திலிருக்கும் கபிலேஸ்வரர் சுவாமி கோவில் முக மண்டபமும் இடிந்து விழுந்தது.

மழை மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்தத் தேதிகளில் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட் என்னவாகும் என குழம்பினர். தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளது தேவஸ்தானம். இம்மாதம் 18 முதல் 30ஆம் தேதி வரை  முன்பதிவு செய்த அதே டிக்கெட்டுகளை பயன்படுத்தி அடுத்த ஆறு மாதத்திற்குள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.