×

அரசு பள்ளிக்குள் புகுந்த லாரி.. 9 மாணவர்கள் காயம்..!

 

திருச்சியிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் காயமடைந்தனர். 

திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சரக்கு லாரி ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. லாரியை ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பாலசமுத்திரம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. வீதியை விட்டு விலகிச் சென்ற அந்த லாரி, பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை அதிவேகமாக இடித்துத் தள்ளிக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

லாரி சுவரை மோதிய வேகத்தில், சுற்றுச்சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் சுவரின் அருகே நின்று கொண்டிருந்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் மீது இடிபாடுகள் விழுந்ததில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மிதிவண்டிகளும் (Cyclics) லாரியில் சிக்கி உருக்குலைந்தன.

சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக விரைந்து வந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டுத் தொட்டியம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். லாரியை அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும் இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஹரிஹரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளி நேரத்தின் போது அரசுப் பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.