"வரும் நாட்களில் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் படத்தை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்"- வைகோ
தமிழ்நாட்டில் யார் எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டினாலும் 2026 இல் திமுக தான் வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போடு, “அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை நிர்முலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு திராவிட இயக்க பூமி, தந்தை பெரியாருன் அண்ணாவும் கலைஞரும் சமய நல்லிணக்கத்தை பேணினார்கள். தமிழ்நாட்டில் நிலவும் சமய நல்லிணக்கத்தை கெடுக்கப்பார்க்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்தியாவிற்கு பெருமை சேர்த்து அகிம்சை வழியை போதித்தவர் காந்தி. அவர் பெயரை உலகமே உச்சரித்து கொண்டுபிருக்க இந்திய அரசு நீக்கி உள்ளார்கள். வரும் நாட்களில் ரூபாய் நோட்டுகளில் அவர் படத்தை எடுக்க தயங்க மாட்டார்கள். இப்படி பல வகைகளிலும் இந்துத்துவ சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை காக்க 10 முறை நடை பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நாளை சமத்துவ நடைப்பயணத்தை மேற்கொள்கிறோம். முதலமைச்சர் அந்த நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைக்கிறார். நாளை தொடங்கும் நடைப்பயணம் 10 நாட்களில் மதுரையில் நிறைவடையும். இந்த நடைப்பயணம் மதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். நடைப்பயணத்தில் திமுக அரசுக்கு ஆதரவாகவும் சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்வோம். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இருந்தபொழுதும் திருத்தணியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை தந்துள்ளது. இதுபோல் இனி நடக்காமல் இருக்க இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை தமிழ்நாடு அரசு எடுக்கும் என நம்புகிறோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இருந்த பொழுதும் அதை சமாளித்து பல திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். கூட்டணி விவகாரத்தில் லக்ஷ்மண ரேகை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் நாங்கள் கூற மாட்டோம். தமிழ்நாட்டில் யார் எவ்வளவு பெரிய கூட்டம் கூட்டினாலும் திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.