வீட்டிற்குள் அத்துமீறல்.. தவறான வீடியோ? மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
’மஞ்சும்மல் பாய்ஸ்’ (manjummel boys) திரைப்பட இயக்குநர் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரில், இயக்குநர் தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை தவறாக வீடியோ எடுக்க முயற்சித்ததாகவும் அந்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றதாக அப்பெண் தெரிவித்த நிலையில், சமீபத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் இயக்குநர் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா 74, 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விரைவில் வாக்குமூலம் பெற உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இயக்குநர் சிதம்பரத்திற்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹேமா கமிட்டி தொடர்பாக மலையாள சினிமாவில் பல்வேறு கலைஞர்கள் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், தற்போது வெற்றிப் படங்களில் ஒன்றான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குநர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புதிய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
BNS பிரிவு 74-ன் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இயக்குநர் சிதம்பத்திற்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். பிரிவு 75 என்பது தவறான உடல் தொடர்பு, பாலியல் வன்கொடுமை, பெண்ணிடம் தவறான படங்களை காண்பித்தல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்வதைத் தடுக்கும் சட்டப் பிரிவு ஆகும்.
இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதே போல் பிரிவு 79 என்பது, ஒரு பெண்ணை அவமதிக்கும் மற்றும் தவறான வார்த்தைகள், சைகைகள் மற்றும் செயல்களை கையாள்வதாகும். இந்த பிரிவு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.