ஒரே ஆட்டோவில் கோயில் பயணம்... வழியிலேயே காத்திருந்த எமன்: பெரியபாளையம் அருகே நடந்த சோகம்!
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42). இவரது மனைவி பூங்கொடி (39). இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், லோகநாதன், அவரது மனைவி பூங்கொடி, மகள், மனைவியின் தாயார் ராதா (65), மைத்துனரின் மகன்கள் இருவரை அழைத்துக கொண்டு நேற்று (ஆகஸ்ட் 29) இரவு பெரியபாளையம் கோயிலுக்கு ஒரே ஆட்டோவில் சென்றுள்ளார்.
இவர்கள் பயணித்த ஆட்டோ பனபாக்கம் அருகே உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது முன்னாள் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் மீட்டு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் அவரது மைத்துனரின் மகன் என இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்த மூவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த மூவரது சடலங்களை கைப்பற்றிய பெரியபாளையம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையம் கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.