×

பழைய வாகனங்களை அகற்ற கூடுதல் அவகாசம் - மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போக்குவரத்துத் துறை..

 


பழைய வாகனங்களை அகற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் கால அவகாசம் அளிக்கக்கோரி போக்குவரத்து துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்ற வேண்டும் என அண்மையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  அந்தவகையில் தற்போது வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 1, 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள்,  15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஸ்க்ராபிக் முறையில் காலாவதியான வாகனங்களை அகற்றும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக 1,600 வாகனங்களையும் மாற்றுவது என்பது அரசுக்கு சவாலான காரியம் என்பதால், கூடுதல் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வாகனங்களை ஸ்க்ராபிங் முறையிக் அகற்றும் திட்டத்திற்கான கால அவகாசத்தை ஐந்தாண்டுகள் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக போக்குவரத்து துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட வாகனங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.