துரோகிகளா? தொண்டர்களா? அதிமுக மகளிரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிரணி செயல்பாடுகள் குறித்தும், அதிமுக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் உச்சக்கட்டமாக இருக்கும் நிலையில், மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக மகளிரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல்
2. இரவு பகலாக அதிமுகவுக்காக அல்லும் பகலும் தேர்தல் பணிகளை மேற்கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தல்.
3. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் பொய்க்கால் குதிரை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதிக்குள்ளாகும் மக்களின் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கண் துஞ்சாமல், கடமை உணர்வோடு ஆற்றி கட்சிக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். துரோகிகள் வெளியேறுவது கட்சிக்கு இழப்பு அல்ல. அது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மக்கள் வாக்களித்து இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி அனுப்பினால், அவர்கள் ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் இணைகின்றனர். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரான செயல் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.