கோயம்பேடு மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணம் செய்த இளைஞரால் ரயில் நிறுத்தம்..!
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்தபோது, "எனக்கு நேரமாகிறது, என்னை விடுங்கள்" என்று கூறிவிட்டு, டிக்கெட் கவுண்டரைத் தாண்டிக் குதித்து வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்து கொண்டார்.
அந்த இளைஞரின் விசித்திரமான செயலால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ ஊழியர்கள், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினர். திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகளிடையே பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. ஊழியர்கள் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றபோது, அவர் கதறி அழுதபடியே "என் வாழ்க்கையே போச்சு, என்னை மன்னித்து விடுங்கள்" என்று ரயிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடி அலறினார்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ போலீசார், அந்த இளைஞரைக் கட்டுப்படுத்திப் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் வீரவேல் என்பதும், அவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
வீரவேலின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் கோயம்பேடு நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் வீரவேலுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும், அதன் விளைவாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது வீட்டிலிருந்து வெளியேறி இதுபோன்று விசித்திரமாக நடந்துகொள்வதும் தெரியவந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, முறையான பயணச்சீட்டுடன் பயணிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க ரயில் நிலையங்களில் பாதுகாப்புக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.