×

இயல்புக்கு வந்த ரயில் சேவை: கூடுதல் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்!

 

கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு முன்பதிவு செய்த  அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவதற்கு தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முந்தைய கால கட்டத்தில்  இருந்தது போன்று வழக்கமான அளவில் தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று தொடர்வண்டி வாரியம் அறிவித்திருக்கிறது. இது இந்தியாவின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் என்பதைக் கடந்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த முடிவு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான போக்குவரத்துக்கு முதுகெலும்பாக திகழ்வது தொடர்வண்டி சேவைகள் தான். உள்ளூர் அளவிலும், புறநகர் பகுதிகளிலும் இயக்கப்படும் தொடர்வண்டிகள் தவிர மொத்தம் 1768 விரைவுத் தொடர்வண்டிகளை தொடர்வண்டி வாரியம் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்வண்டிப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக சில தொடர்வண்டிகள் மட்டும் இயக்கப் பட்டன. நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் சிறப்புத் தொடர்வண்டிகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவல் இப்போது கிட்டத்தட்டக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதால் தான் இப்போது நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அனைத்து தொடர்வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் கட்டண விகிதத்தில் தொடர்வண்டித்துறை பாகுபாடான நிலைப்பாட்டைக் கடைபிடிக்கிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல. கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் இயக்கப்பட்ட தொடர்வண்டிகள் அனைத்தும் சிறப்புத் தொடர்வண்டிகளாக இயக்கப்பட்டன. சிறப்புத் தொடர்வண்டிகளுக்கான கட்டணம்  வழக்கமான கட்டணத்தை விட 30% கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான 50% கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, முழுமையான கட்டணம், அதுவும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சிறப்புத் தொடர்வண்டிகளில் சலுகை வழங்க முடியாது என்பதைக் காரணம் காட்டி இது நியாயப்படுத்தப் பட்டது.

கொரோனா பாதிப்பு காலத்திற்கு முந்தைய கால அட்டவணைப்படி அனைத்துத் தொடர்வண்டிகளும்  இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இயக்கப்பட்ட சிறப்புத் தொடர்வண்டிகள் அனைத்தும், இப்போது வழக்கமான தொடர்வண்டிகளாக அறிவிக்கப்பட்டு விட்டன. அதேபோல், அந்த தொடர்வண்டிகளுக்கான வழக்கமான கட்டணங்களும், கட்டணச் சலுகைகளும் நடைமுறைப்படுத்தப் படும் என்று தொடர்வண்டி வாரியம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இனிவரும் காலங்களில் இந்த தொடர்வண்டிகளில் பயணம் செய்வதற்காக, இதற்கு முன்பு முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று தொடர்வண்டி வாரியம் அறிவித்துள்ளது. இது நியாயமல்ல.

தொடர்வண்டிக்கானக் கட்டணம் என்பது பயணத் தேதிக்கான கட்டணத்தையே குறிக்கும். கடந்த காலங்களில் தொடர்வண்டிக் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு நடைமுறை படுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள், பயணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கும், அவர்கள் முன்பதிவின் போது செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத்  தொகை வசூலிக்கப்படும். அது எவ்வாறு நியாயமோ, அதேபோல், பயணக் கட்டணம் குறைக்கப்படும் போதும், முன்பதிவின் போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அவ்வாறு கூடுதலாக செலுத்தப் பட்ட தொகையை திருப்பித் தருவது தான் முறை. தொடர்வண்டித்துறை அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள கட்டணத்துடன் ஒப்பிடும் போது, ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் 65% வரை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளையும், சிரமங்களையும் சந்தித்து ஈட்டிய பணத்தை கட்டணம் என்ற பெயரில் பறித்துக் கொள்வது முறையல்ல. எனவே, நடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு முன்பதிவு செய்த  அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவதற்கு தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.