பொங்கல் கொண்டாட சொந்த ஊர் வந்தவர் 2 மகன்களுடன் பலியான சோகம்!
செய்யாறு அருகே சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாட வந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நாயந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்ததை அடுத்து வேலையைத் தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு தனியார் கம்பெனியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும் ஏழு வயதில் ராஜேஷ்,5 வயதில் லத்தீஷ் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக தனது சொந்த கிராமமான நாயந்தாங்கள் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்னையில் இருந்து இங்கு வந்துள்ளார். இன்று மாலை தனது இரு இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அதே கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். நீரில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியதை கண்ட தங்கராஜ் பிள்ளைகளை காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் ஆழமான பகுதிக்கு மூவரும் சென்று விட்டதால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஏரியிலேயே மூழ்கியுள்ளனர். மேலும் தனது கணவரும் பிள்ளைகளும் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த திவ்ய பாரதி அக்கம் பக்கத்தினரை அழைத்துக் கொண்டு ஏரியில் நீண்ட நேரம் தேடியதாக தெரிகிறது. இதில் மூன்று பேருமே நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கிராமத்தினர் உதவியுடன் மூவரது உடல்களையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பொங்கல் விழா கொண்டாடுவதற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த தங்கராஜ் தனது இரு மகன்களுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.